உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பாக தோல் அமைந்திருக்கிறது. உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியமும் சம நிலையில் இருக்க வேண்டியது முக்கியமானது.இவை இரண்டும் சரும ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் சரும ஆரோக்கியத்திற்கு வித்திடும்.
நிறைய பேர் உடற்பயிற்சி செய்தால் உடல் தசைகள் இறுக்கமடைந்து விடும். அது சரும அழகில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். உண்மையில் உடற்பயிற்சி பல்வேறு வடிவங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அவற்றுள் தோல் ஆரோக்கியம் முக்கியமானது.
இதுபற்றி குர்ககானை சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சலி குமார் கூறுகையில், ‘‘உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளின் மூலம் இதய நலனில் கவனம் செலுத்த முனைகிறோம். இருப்பினும், ஆரோக்கியமான சருமத்திற்கு உடற்பயிற்சியும் முக்கியமானதாகும். தோல்தான் மிகப்பெரிய உறுப்பு என்பதால் அதை அன்போடும் அக்கறையோடும் அரவணைத்துக்கொள்ளுங்கள்’’ என்கிறார்.
உடற்பயிற்சி மூலம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:
உடற்பயிற்சி செய்யும் போது,இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கப்படுகிறது. அப்போது சரும செல்கள் உட்பட உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சப்ளை செய்யப்படுகிறது. அதன் மூலம் சரும செல்களின் ஆரோக்கியமும் பேணப்படுகிறது.
வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களின் உற்பத்தியைத் தூண்டி, சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
உடற்பயிற்சி செய்த பிறகு, வியர்வையை துடைத்தால் மட்டும் போதாது. உடலை நன்றாக கழுவ வேண்டும். ஏனெனில் துடைக்கும்போது வியர்வை தோலில் படிந்துவிடும். அது சரும துளைகளை அடைத்து விடும். மேலும் வியர்வையில் உள்ள உப்பு சரும வெடிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதாகும். எப்போது உடற்பயிற்சி செய்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்கக்கூடாது. குளிர் காலத்திலும் கூட தவறாமல் உபயோகிக்க வேண்டும். அது சரும பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும். வீட்டிற்குள் இருக்கும்போது கூட சன்ஸ்கிரீன் மூலம் சருமத்தை பாதுகாக்க வேண்டும்.
Comments
Post a Comment