"தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்றொரு சொலவடை உண்டு. அதிலும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி மிகவும் வேதனை தரக்கூடியது.
தலையில் டம் டம்மென சுத்தியல் வைத்து அடித்தாற்போல் வலி பின்னியெடுக்கும். இந்த ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது? ஒற்றைத் தலைவலியை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து விளக்குகிறார், அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா. ''ஒற்றைத் தலைவலியால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கும் இந்த தலைவலியானது, பாதிப்புக்குள்ளாகும் நபரின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. உதாரணமாக, நன்றாக படிக்கும் ஒரு மாணவிக்கு அவர் தேர்வு எழுதும் நாட்களுக்கு முன்பு மைக்ரேன் வந்தால் படிப்பின் மீது கவனம் குவிக்க இயலாமல் போகிறது. மதிப்பெண்ணும் சரியும். இல்லற வாழ்வில் உள்ள பெண்களுக்கு இந்த தலைவலி வரும் போது குடும்ப உறுப்பினர்கள் மீது சினத்தை கக்கும் போது தேவையற்ற பல மனக்கசப்புகளும் சண்டை சச்சரவுகளும் நேருகின்றன . அலுவலகங்களில் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அன்றைய நாள் அத்தோடு முடிந்தது என்ற நிலைதான்.
எந்த செயலிலும் முழுமையாக ஈடுபாடு இல்லாமல் ஆக்கி விடும் இந்த ஒற்றைத் தலைவலிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மூளைக்கு க்ளூகோஸை எரிபொருளாக உபயோகிப்பதில் ஏற்படும் குளறுபடி அல்லது கோளாறு; மூளை தேவைக்கும் அதிகமாக உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இருப்பது; உள்காயங்களால் ஏற்படும் மூளைத் தேய்மானம்; மூளை நரம்பு செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா எனும் எனர்ஜி ஃபேக்டரி முறையாக செயலாற்றாமை உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன.
மேலும் மைக்ரேன் நோயாளிகளுக்கு மூளையில் க்ளூடமேட் எனும் உயிர் வேதியியல் ரசாயனம் அதிகமாக சுரக்கின்றது என்றும் காபா எனும் ரசாயனம் அளவில் குறைவாக சுரப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. க்ளூடமேட் எனும் ரசாயனம் என்பது எப்போதும் நம்மை ரோலர் கோஸ்டர் ரைடில் இருப்பது போலவும் ஒரு த்ரில்லர் பேய் படம் பார்ப்பது போன்ற உணர்விலுமே வைத்திருக்கும். இதுவே காபா ரசாயனம், அமைதியான மலைப்பகுதியில் ஆற அமர மெதுவாக நடந்து சென்று குளிர்ந்த காற்றை மெல்லிய சாரல்களுடன் அனுபவிப்பது போன்ற அமைதியான உணர்வைத் தரக்கூடியது.
ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும் அதிலும் பெரும்பான்மை உடல் பருமன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே உடல் எடையை குறைப்பது என்பது மைக்ரேன் தலைவலியின் வீரியத்தை குறைப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகள் உண்டு. கலோரி குறைவாக உண்பது அல்லது கலோரி குறைவாக உண்பதுடன் சேர்த்து உடற்பயிற்சி செய்வது. இவற்றால் உடல் எடையை குறைக்க முடியும்.
ஆனால் தற்போதைய ஆய்வுகள் "கீடோன்கள்" மூலம் மைக்ரேனைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது நோக்கி நகர்ந்து வருகின்றன. நம் உடலில் கீடோன்களை உற்பத்தி செய்து, கீடோன்கள் உதவியுடன் மூளையை இயக்கும் போது மூளை எந்த சச்சரவுமின்றி செயல்படுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கிட்டத்தட்ட இதே பிரச்சனையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வரும் மருந்துகளால் தீராத வலிப்பு நோய்க்கு கீடோன்கள் உதவி புரிந்து வருகின்றன.
நம் மூளையானது இரண்டு வகையான எரிபொருள்கள் மூலம் இயங்கும். ஒன்று க்ளூகோஸ், மற்றொன்று கீடோன்கள். இதில் கீடோன்கள் மூளைக்கு மிகச்சிறந்த எரிபொருளாக இருக்கும் தகுதி வாய்ந்தவை. காரணம், கீடோன்கள் உற்பத்தியின் போது க்ளூகோஸ் உற்பத்தியில் வெளியிடப்படுவதைப் போன்ற தேவையற்ற ஊறுசெய்யும் கழிவுகள் வெளியிடப்படுவதில்லை. கீடோன்கள் மூளை செல்களின் தேவையற்ற உணர்ச்சி ஊக்கநிலையை (Hyperexcitability) மட்டுப்படுத்துகின்றன. கீடோன்களை பிரதான எரிபொருளாக தேர்ந்தெடுக்கும் போது க்ளூடமேட் அளவுகள் குறைந்து, காபா அளவுகள் கூடுகின்றன. இதனால் அமைதியான நிலை ஏற்படுகின்றது. கீடோன்களை எரிபொருளாக மாற்றியமைத்த பின், ரத்தத்தில் ஏறும்/இறங்கும் க்ளூகோஸ் அளவுகள் பொறுத்து மூளையின் செயல்பாடுகள் மாறுவதில்லை.
மேற்சொன்ன பல விஷயங்கள் மூலம் கீடோன்கள் மைக்ரேன் தலைவலி வராமலும், வலிப்பு நோயை கட்டுப்படுத்தக்கூடும். இத்தகைய கீடோன்களை எவ்வாறு உற்பத்தி செய்வது?
கீடோன்களை உணவில் இருந்து உற்பத்தி செய்ய மாவுச்சத்தை தினசரி 40 கிராமுக்கு மிகாமல் எடுக்க வேண்டும். தேவையான அளவு புரத சத்தும் கொழுப்புச் சத்தும் எடுக்கும் போது நமது உடல் கீடோன்களை உற்பத்தி செய்து, நமது மூளை பெரும்பான்மை கீடோன்கள் மூலம் செயல்படும். இதை உணவு மூலம் அடையும் கீடோசிஸ் நிலை என்கிறோம். இத்தகைய கீடோஸிஸ் நிலையில் பலருக்கும் மைக்ரேன் தலைவலி முன்பு இருந்ததை விடவும் வீரியத்தில் குறைதல், இரண்டு தலைவலிகளுக்கு இடையேயான கால அளவு நீட்டித்தல் , அடிக்கடி வரும் தலைவலி அரிதாகிப் போவது போன்ற பல நன்மைகளை அடைந்து வந்துள்ளதாக பல ஆய்வு முடிவுகள் உள்ளன.
ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் செய்யக்கூடாதவை:
* அதிக மன அழுத்தம்/ அதீத உடல் சோர்வு.
* உணவுகளை அதன் முறையான இடைவெளியில் உண்ணாமல் காலம் தாழ்த்தி உண்பது அல்லது பட்டினி கிடப்பது மைக்ரேனை கிளப்பி விடும்.
* தூக்கமின்மை அல்லது அதிகநேரம் தூங்குவது. இரண்டுமே தவறு.
* பெண்களுக்கு மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும்போது மைக்ரேனை தூண்டும்.
* மலை வாசஸ்தலங்களுக்கு செல்வது அல்லது உயரமான இடங்களில் இருந்து கீழே வருவது, அதிக காற்று அடிப்பது.
* இனிப்பு சுவை கொண்ட பொருள்களை உண்பது (சீனி / நாட்டு சர்க்கரை/ தேன் முதற்கொண்டு இனிப்பு என்று நாக்கில் பட்டால் தலைவலி தூண்டப்படலாம்)
* பீட்ரூட், முள்ளங்கி, ஸ்பினாச் கீரை , செலரி போன்ற நைட்ரேட் அடங்கி உணவுகள்
* சிலருக்கு சிவப்பு மாமிசமும் கடல் உணவுகளும் தலைவலியை கிளப்பலாம்.
* அனைத்து வகை குளிர்பானங்கள் / பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்
* மதுபானம்/ சிகரெட் புகையின் வாசனை
மேற்சொன்னவை அனைத்தும் மைக்ரேனை தூண்டக்கூடியவை
மைக்ரேன் உங்களுக்கு இருக்கிறதா? மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள். கூடவே உணவு முறையை ‘குறை மாவு’ (Low carbohydrate) உணவு முறையாக மாற்றுங்கள்; இனிப்பின் மீது நா கொண்ட ஆசையை விட்டொழியுங்கள்; மிதமான நடைபயிற்சி செய்யுங்கள்; மன அமைதி தரும் விஷயங்களை செய்யுங்கள்; மன அழுத்தத்தை குறையுங்கள்; இயலாவிட்டால் மனநல மருத்துவரை சந்தித்து கவுன்சிலிங் சிகிச்சை பெறுங்கள்'' என்கிறார் அவர்.
Comments
Post a Comment