ஜீன்ஸ் பேன்ட்களின் முன்பக்க பாக்கெட்டுகளில் ஒரு சிறிய உள் பாக்கெட் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த பாக்கெட் எதற்கு என யோசித்திருக்கிறீர்களா?
ஆடை என்பது மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. மனிதர்கள் வளர வளர, மனிதர்கள் கையில் காசு வர வர ஆடைகளும் மாறிக் கொண்டே வந்துள்ளன.
ஒருகாலத்தில் ஜமீந்தார்கள், நிலக்கிழார்கள் மட்டுமே அணிந்து வந்த வேட்டி சட்டையை, இன்று எளிய மனிதர்கள் மற்றும் விவசாயிகள் அணிகிறார்கள்.
அதே போல, பல தசாப்தங்களுக்கு முன் தொழிலாளர்கள் மற்றும் கடின உடல் உழைப்பைக் கொடுக்கும் மக்கள் அணிந்து கொண்டிருந்த ஜீன்ஸ் பேன்டை, தற்போது உலகின் ஆகப் பெரிய பணக்காரர்கள் அணியும் ஆடையாக வளர்ந்துள்ளது. ஜீன்ஸ் பேன்ட் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்கிற சுவாரசிய வரலாற்றைக் கீழே கொடுத்துள்ள இணைப்பில் படிக்கலாம்.
சரி, ஜீன்ஸ் பேண்ட் என்றால் ஒருமாதிரியான நீல வெள்ளை நிறத்தில் இருக்கும், அதில் காப்பர் ரிவீட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். தடிமனான நூலால் தையல் போடப்பட்டிருக்கும்.
வழக்கமான பேன்ட்களில் இருப்பது போல பாக்கெட்டுகள் இருக்காது. போதாக்குறைக்குப் பின் பக்கமும் இரு பாக்கெட்டுகள் இருக்கும், தற்கால ஜீன்களில் ஆங்காங்கே கிழிந்திருக்கும்... எனப் பல வித்தியாசங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அதெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிடுவோம். ஜீன்ஸ் பேன்ட்களின் முன்பக்க பாக்கெட்டுகளில் ஒரு சிறிய உள் பாக்கெட் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த பாக்கெட் எதற்கு என யோசித்திருக்கிறீர்களா?
இன்று சாவி வைத்துக் கொள்வதற்கு, பேருந்தில் பயணித்தால் பயணச் சீட்டுகளை வைத்துக் கொள்வதற்கு, பேனா, ஹெச் செட், இயர் ஃபோன் போன்றவற்றை வைத்துக் கொள்வதற்கு என நம் வசதிக்குத் தகுந்தாற் போலப் பயன்படுத்துகிறோம்.
அமெரிக்காவில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பவர்களை கவ்பாய் (Cowboy) என்பர். கவ்பாய்ஸ் மற்றும் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் கூட 1940களிலேயே கடிகாரம் வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது.
ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்கப்பட்ட தொடக்கக் காலத்தில், அந்த சிறிய பாக்கெட்டுகள் இவர்கள் தங்களின் செயின் கடிகாரங்களை வைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டன.
1940களில் செயின் கடிகாரங்கள் புழக்கத்தில் இருந்தன. ஜீன்ஸ் அணியும் மக்கள் பெல்ட்டை இறுகப் பற்றிப் பிடிக்க உருவாக்கப்பட்ட பெல்ட் லூப்கள் ஒன்றில் அந்த சங்கிலியை இணைத்துவிட்டு, அந்த சிறிய பாக்கெட்டில் கடிகாரத்தை வைத்துக் கொள்வர்.
இன்று செயின் கடிகாரங்கள் வழக்கொழிந்து விட்டன. ஆனால் இன்றும், ஜீன்ஸ் பேன்ட்களில் அந்த சிறிய பாக்கெட்டுகள் ஒரு ஸ்டைலாகவே தொடர்கிறது. காலம் தான் எத்தனை வினோதமானது.
Comments
Post a Comment