இவரின் இந்த சேவையைச் சம்பளம் கொடுத்துப் பெறக் கிட்டத்தட்ட 3000 கோரிக்கைகள் வருகின்றது.
ஜப்பானில் வசிக்கும் ஒரு நபர் எதுவுமே செய்யாமல் இருப்பதற்குச் சம்பளம் வாங்குகின்றார். மேலும் அவரின் அந்த சேவைக்கு பெரும் வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ என்ற நபர் புதிய சேவை முயற்சியாக ஒரு சுய தொழிலை உருவாக்கியுள்ளார். அந்த சேவை படி தேவைப்படுபவர்கள் அவரை வாடகைக்கு புக் செய்து கொள்ளலாம். அவர் சாப்பிடுவது, குடிப்பது மற்றும் கருத்துச் சொல்லுவது போன்றவை தவிர வேறு ஏதும் செய்யமாட்டார். 39 வயது ஆகும் ஷோஜி மோரிமோட்டோ 2018 ஆம் ஆண்டு இது குறித்து ஒரு ட்விட்டர் கணக்கை ஆரம்பித்து அதில் இந்த சேவையைத் தொடங்கியுள்ளார்.
அவரின் இந்த வினோத முயற்சிக்குப் படிப் படியாக ஆதரவு சேர்ந்து தற்போது 2,50,000 பேர் அவரை ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். இவரின் இந்த பதிவு பெருமளவு பகிரப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. இவருக்கு எப்படி இந்த ஆலோசனை வந்தது என்றால் அதற்குக் காரணம் இவரின் குடும்பம், நண்பர்கள், கூட வேலைபார்த்தவர்கள் தான். இவரை எதுவுமே செய்யாத நபர் என்று அடிக்கடி சொல்லியுள்ளனர். அதாவது இவரே செய்யாமல் அடுத்தவர்களைச் செய்ய விடுவார். ஆனால் இதனையே அவர் தொழிலாக மாற்றுவார் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அவரை வாடகைக்கு எடுக்க முயன்ற ஒரு சில வேலைகளை அவர் மறுத்துள்ளார். அவை வீட்டைச் சுத்தம் செய்வது, துணி தோய்ப்பது, அடுத்தவரைப் பார்த்து கேலி செய்வது, பேய் வீட்டுக்குச் செல்வது மற்றும் ஆடையின்றி போஸ் கொடுப்பது போன்றவை. அவர் செய்த சேவையில் சில முக்கியமானவையும் இருக்கின்றன. அவை தெருவில் வாசிக்கும் இசைக் கலைஞரை ஆதரித்துக் குளிரும் பணியில் நின்று கேட்பது, தனிமையாக உள்ளவர்களுடன் ஷாப்பிங் செல்வது, உணவகம் செல்வது போன்றவை. மேலும் தனியாகப் பிறந்த நாள் கொண்டாடும் நபர்களுடன் கேக் வெட்டுவது ஆகிய சேவைகளையும் செய்து வருகிறார்.
இவரின் இந்த சேவையைச் சம்பளம் கொடுத்துப் பெறக் கிட்டத்தட்ட 3000 கோரிக்கைகள் வந்துள்ளது என்றும் ஒரு சேவைக்கு இவர் இந்திய ரூபாய் படி 6,641 ரூபாய் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு வெறும் மூன்று கோரிக்கைகளை மட்டும் தான் இவர் எடுத்துக்கொள்ளுவாராம்.
மேலும் இவர் பணியில் ஹெலிகாப்டரில் ஒருவருடன் பயணித்தது, ஒருவருடன் டிஸ்னிலேண்ட் சென்றது, தற்கொலைக்கு முயன்ற நபருடன் மருத்துவமனையில் கூட இருந்தது போன்றவையும் அடங்கும்.
இந்த புதிய தொழிலைப் பற்றி அவர் கூறுகையில், இதிலிருந்து நான் யாரையும் ஜட்ஜ் செய்யக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் மனதளவில் தனிமையில் இருப்பவர்களுக்கு எனது அனுதாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment