நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவேண்டும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இன்றியமையாத விஷயங்களில் ஒன்று தூக்கம். உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் முக்கியம். ஒருசில நேரத்தில் உணவு தண்ணீர் இல்லாமல் கூட இருந்து விடலாம், ஆனால் சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் தீவிரமான மனநல பாதிப்புகளும் ஏற்படும்.
ஒரு நபர் சராசரியாக எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோராயமாக ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று கூறப்படுவதுண்டு; இது வயதிற்கு ஏற்ப மாறுபடும். நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் தினமும் இவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்
அதிக ஆற்றல் இருக்கும் இளம் வயதினர் 4 மணி நேரம், 5 மணி நேரம் மட்டும் தான் தூங்குவார்கள். வேலைப்பளுவால் நடுத்தர வயதினர் தூக்கம் குறைவாக இருக்கும். முதியவர்களுக்கு வயோதிகம் காரணமாக தூக்கம் வராது. இந்நிலையில் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவேண்டும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்ற ஆய்வு
யூகேவின் பயோ பேங்கில் இருந்து 38 முதல் 73 வயதான நபர்களில் 5 லட்சம் நபர்களை யுகே மற்றும் சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தேர்வு செய்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வின் முடிவு என்ற நேச்சர் ஏஜிங் என்ற பத்திரிகையில் வெளியானது. ஆய்வில் கலந்து கொண்ட 5 லட்சம் பங்கேற்பாளர்களிடமும் அவர்கள் தூக்கம் பற்றிய அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
தூக்கம் குறைவால் ஏற்படும் காக்னிட்டிவ் பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. காக்னிட்டிவ் பாதிப்பு என்பது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு, எவ்வளவு விரைவாக, சிந்தித்து ஒருங்கிணைத்து செயல்படுகிறோம் என்பதை குறிக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒரு விஷயத்தை எவ்வளவு வேகமாக புரிந்து கொள்கிறார்கள், விஷுவலாக கவனம் எப்படி இருக்கிறது, நினைவுகூர்மை மற்றும் எவ்வளவு விரைவாக நினைவுபடுத்தி பார்க்க முடிகிறது, பிரச்சனைகளை சரி செய்வதற்கான திறன்கள் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களுடைய பொதுவான உடல் நலம், மன நலம், எப்போது தூங்க செல்கிறார்கள், எந்த காரணங்களால் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் உள்ளிட்ட பல விவரங்கள் பெறப்பட்டன. கிட்டத்தட்ட 40,000 பங்கேற்பாளர் இடம் மூளை இமேஜிங் எனப்படும் சோதனையும் செய்யப்பட்டு அவர்களின் மரபணு சார்ந்த தகவல்களும் பெறப்பட்டன. இந்தத் தரவுகளை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது போதிய தூக்கம் இல்லாமல் அல்லது அதிகமாக தூங்குபவர்களுக்கு காக்னிட்டிவ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு தினசரி இரவு 7 மணி நேரம் நல்ல தூக்கம் இருந்தாலே மூளை செயல்திறனில் காக்னிட்டிவ் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இது மன நலத்தை பாதுகாக்க உதவும் என்பதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறைவாக தூங்குபவர்களுக்கு மட்டுமல்ல அதிகமாக தூங்குபவர்களும் இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
தூக்கம் குறைந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்
நம்முடைய Cognitive Function என்று கூறப்படும் சிந்தித்து, மூளை மற்றும் உடல் ஒருங்கிணைந்து செயல்படும் வேலைகள் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியம் ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு நன்றாக தூங்கவேண்டும். ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றால் அதன் தாக்கம் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும். ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் ஒரு நபர் இருந்தால், அந்த தாக்கம் நீங்க முப்பது நாட்கள் ஆகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதைப்போல மனநிலை பிரச்சினைகளை ஆய்வு செய்பவர்களும் குறைவான தூக்கம் அல்லது சரியான தூங்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு பலவிதமான மூளை சார்ந்த காக்னிட்டிவ் குறைபாடுகள் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
சரியான தூக்கம் எவ்வளவு முக்கியம்
உடலில் எப்படி கழிவுகள் நீக்கப்படுகிறதோ, அதே போல தூங்கும் பொழுது மூளை நமக்கு தேவையில்லாத கழிவுகளை நீக்குகிறது. வயதாகும் பொழுது தூங்கும் நேரம், தூங்க செல்லும் நேரம், எவ்வளவு ஆழமாக தூங்குகிறோம் உள்ளிட்ட பல விஷயங்கள் மாறுபடும். பகலெல்லாம் நன்றாக தூங்கி இரவில் தூக்கம் வராமல் அவதிப்படும் முதியவர்களும் இருக்கிறார்கள். தூக்கத்தில் இவ்வாறு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மூளையின் செயல்திறனை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உளவியல் ரீதியான குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. ஏற்கனவே மேலே கூறியுள்ளது போல தேவையான தூக்கம் இல்லாத பொழுது மூளையால் டாக்ஸின்களை நீக்கி முடியாமல் போகிறது.
அதுமட்டுமில்லாமல் ஒரு நபர் எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பது அந்த நபரின் நினைவுகள் மற்றும் செயல்பாடுளில் ஏற்படும் வித்தியாசங்களையும் இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
எந்த இடையூறும் இல்லாமல் ஓரளவுக்கு நன்றாக தூங்குபவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் வருவதில்லை என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. ஏழு மணி நேரம் தூங்கினால் கூட இடையிடையே தூக்கம் கலைந்தால் அது அழற்சி மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகளை அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அல்சைமர், டிமென்ஷியா என்ற மராத்தி நோய், ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ், படபடப்பு, தீவிரமான பதற்றம், ஆகியவை தூக்கம் குறைந்தால் ஏற்படும்.
முதியவர்கள் 7 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சைக்கியாட்ரிக் துறையின் பேராசிரியரான பார்பரா சஹாகியான் ‘தூக்கம் என்பதை எல்லோருக்கும் மிகவும் முக்கியமானது; ஆனால் வயதாகும்போது உடல் மற்றும் மூளை நன்றாக ஓய்வெடுக்க தூக்கம் மிகவும் இன்றியமையாதது. எனவே முதியவர்கள் ஆரோக்கியமான தூக்கத்தை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். உடல் ரீதியான, மன ரீதியான மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை தவிர்க்க நன்றாக தூங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment