Food | சரியான நேரத்தில் சாப்பிடுவது முதல் புரோட்டீன் நிறைந்த உணவுகள், நிதானமாக சாப்பிடுவது போன்ற பல்வேறு விஷயங்களை உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே அடிக்கடி பசி உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.
பசி என்பது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான உணர்வு. அதே சமயம் அடிக்கடி ஒருவருக்கு பசி ஏற்பட்டால் உங்களது உடல்நிலையில் ஏதோ பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று அர்த்தம். எனவே கவனமுடன் இருப்பது அவசியமான ஒன்று. உடலில் நார்ச்சத்துள்ள உணவுகள் பற்றாக்குறை, உடலுக்குத் தேவையான சத்துக்களுடன் கூடிய உணவுகள் மற்றும் உடலுக்குத்தேவையான நீர்ச்சத்துக்கள் பற்றாக்குறை போன்றவற்றாலும் நமக்கு சாப்பிடக்கூடிய உணர்வு அடிக்கடி ஏற்படும்.
மேலும் உடலில் ஏற்படும் லெப்டின் மற்றும் கிரெலின் ஹார்மோன் மாற்றங்கள், உடலில் திடீரென சர்க்கரை அளவு குறைதல், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களில் உடலில் பசியை தூண்டும் கார்டிசோல் என்கிற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது. எனவே உடலுக்கு பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
இந்நேரங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். இதோடு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் பசி உணர்வைக் கட்டுப்படுத்தலாம்… இதோ உங்களுக்கான வழிமுறைகள்..
பசியைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
புரோட்டீன் நிறைந்த உணவுகள்: நாம் ருசிக்காக சாப்பிடும் அதே சமயத்தில், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறதா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் சாப்பிடும் போது புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இத்தகைய உணவுகள் உங்கள் பசியின் ஹார்மோன்களை குறைப்பது மட்டுமில்லாமல் நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாது.
அடுத்ததாக உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நீங்கள் பணிக்கு அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாக சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. எனவே உணவை நன்றாக மென்று சாப்பிடும் போது ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவதோடு செரிமான சக்தியையும் மேம்படுத்துகிறது. இதோடு நீண்ட நேரம் உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால், திருப்தியான உணவை சாப்பிட்டது போன்ற எண்ணம் ஏற்படும். இது உங்களுக்கு அதிக நேரத்திற்கு உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
மன அழுத்தம், மன சோர்வு போன்ற நேரங்களிலும் அதிகளவு உணவை உட்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு ஏற்படும். எனவே அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்நேரங்களில் மருத்துவரின் பரிந்துரை உங்களுக்கு அவசியமான ஒன்று.
இதோடு சரியான நேரத்தில் சாப்பிடுவது, காலை உணவுகள் கட்டாயம் எடுத்துக் கொள்வது, உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது , நொறுக்குத்தீனிகள் மற்றும் கூல்டிரிங்ஸ் தவிர்த்தல் போன்ற விஷயங்களை நீங்கள் உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே அடிக்கடி பசியிணர்வு ஏற்படாது. அதே சமயம் உங்களது உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பசியிணர்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனபதையும் மேற்கூறியுள்ள முறைகளில் உங்களது உணவு பழக்கவழக்கங்களை இனி வரும் நாள்களில் பின்பற்ற வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நடைமுறை உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நிலையைக் கொடுக்க வழிவகை செய்யும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
Comments
Post a Comment