கூகுள் தொழில்நுட்பத்தில் உள்ள பிழைக்களை கண்டுபிடிப்பவர்களுக்கு கூகுள் வெகுமதிக்களை அறிவித்துள்ளது.
பக் பவுண்டி (Bug bounty) எனப்படும் பிழை வெகுமதிகள், ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் வழங்கும் முக்கியமான செயல்முறையாகும். குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் இது போன்ற செயல்பாடுகளை அவ்வப்போது தொடர்ச்சியாகச் செய்து வருகின்றன. அதாவது, இவற்றின் தளங்கள் அல்லது மென்பொருட்களில் ஏதாவது பிழைகள் இருந்து அவற்றைக் கண்டுபிடிக்கும் நபர்களுக்குச் சிறந்த வெகுமதிகளைத் தந்து அவர்களை அங்கீகரிக்கும்.
அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனம் ஒரு புதிய பக் பவுண்டி திட்டத்தை அறிவித்துள்ளது. கூகுளின் சமீபத்திய பக் பவுண்டி புரோகிராம் எதைப் பற்றியது என்பதை ஆராய்வதற்கு முன், பக் பவுண்டி புரோகிராம்கள் என்றால் என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
பக் பவுண்டிஸ் (Bug bounties) என்றால் என்ன?
பக் பவுண்டி என்பது செயலிகள், சேவைகள் அல்லது இயக்க முறைமைகளில் உள்ள பிழைகள் அல்லது பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிவதற்காகப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அல்லது நெறிமுறை ஹேக்கர்களுக்கு வழங்கப்படும் பண வெகுமதியாகும். எந்தவொரு மென்பொருளும் அல்லது செயலியும் வெளியிடப்படுவதற்கு முன்னர் தவறவிட்ட சில பிழைகளைக் கண்டறிய இந்த வழிமுறை பல நிறுவனங்களுக்கு உதவுகிறது.
கூகுளின் புதிய வெகுமதி
கூகுளின் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் பாதிப்பு வெகுமதிகள் திட்டத்தை (OSS VRP) தொடங்குவதாகக் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இது கூகுளின் திறந்த மூல திட்டங்களில் உள்ள பாதிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கு வெகுமதிகளை வழங்குகிறது. "பாதிப்பு வெகுமதி திட்டங்களில் (VRPs) கூகுளின் OSS VRP-ஐச் சேர்ப்பதன் மூலம், முழு திறந்த மூல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும். மேலும் பாதிக்கக்கூடிய பிழைகளைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த செயல்முறை வெகுமதிகளையும் வழங்குகிறது" என்று கூகுள் தனது வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது. இந்த பக் பவுண்டி திட்டமானது Fuchsia, Golang மற்றும் Angular போன்ற திறந்த மூல திட்டங்களுக்கானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கூகுள் செலுத்தும் தொகை என்ன?
பிழைகளின் தீவிரம் மற்றும் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, வெகுமதிகள் $100 ( சராசரியாக ரூ. 8,000) முதல் $31,337 (சராசரியாக ரூ. 25 லட்சம்) வரை இருக்கும். இதில் வழங்கப்படும் பெரிய தொகைகள் என்பது வழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான பிழைகளுக்கு வழங்கப்படும். எனவே இதன்மூலம் ஒருவரின் படைப்பாற்றலும் ஊக்குவிக்கப்படுகிறது" என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னர் கொடுத்த வெகுமதி எவ்வளவு?
கூகுள் அதன் தற்போதைய பக் பவுண்டி திட்டங்கள் மூலம், 84-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பிழை கண்டுபிடிப்பாளர்களுக்கு (பக் ஹண்ட்டர்ஸ்) வெகுமதிகளை அளித்துள்ளது. இது வரை ஒட்டுமொத்தமாக, இந்த திட்டங்கள் மூலம் 13,000-க்கும் மேற்பட்ட சமர்ப்பிப்புகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இதன் மொத்த வெகுமதி தொகை என்பது $38 மில்லியன் எனக் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. எனவே தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் கூகுளின் இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி வெகுமதிகளைப் பெற முயற்சிகளாம்.
Comments
Post a Comment