தமிழர்களின் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு.
கேழ்வரகின் பயன்கள்
கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன.
இதில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும், உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து.
அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.
இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
கம்பின் பயன்கள்
நார்ச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிரம்பியது கம்பு.
இதில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை.
அதோடு, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கு உண்டு.
வயிற்றில் இருந்து செரிமானமாகி குடலுக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனே பசிக்காது. எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்லது.
ஆனால், கம்பு செரிமானம் ஆக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் அடர்த்தியான தானியம். எனவே, கோடை காலத்தில் இதை அளவாகச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - ஒரு கப்
கேழ்வரகு மாவு- அரை கப்
சர்க்கரை, உப்பு- அரை டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை- அரை கப்
தேங்காய் துருவல்- அரை கப்
ஏலக்காய்த்தூள்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கம்பு மாவையும், அரை கப் கேழ்வரகு மாவையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
முக்கால் டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
பின்னர் அதை மாவில் தெளித்து மாவு முழுவதும் தண்ணீர்ப்பதம் ஆகும்வரை கட்டிகள் இல்லாதவாறு பிசிறவும்.
இட்லித்தட்டை துணியால் கட்டி அதில் மாவைப் பரப்பவும். பிறகு இட்லி பாத்திரத்தில் 15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
சிறிதளவு ஏலக்காய்த்தூளுடன் அரைகப் பொடித்த நாட்டுச்சர்க்கரை, அரை கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் இதை வேகவைத்த புட்டுடன் கலந்து சூடாக பரிமாறினால் சுவையான கம்பு கேழ்வரகு தேங்காய்ப்புட்டு தயார்!!!
Comments
Post a Comment