தடுப்பூசி போட நினைவூட்டல்; ஜெர்மனியில் ‘சிரிஞ்ச்’ வடிவத்தில் விமானப் பயணப் பாதை
- Get link
- X
- Other Apps
‘ஃபிளைட்ரேடார்24’ எனும் இணையத்தளத்தில் ‘சிரிஞ்ச்’ வடிவிலான இந்தப் பயணப் பாதை காண்பிக்கப்பட்டது
ஐரோப்பாவில் கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் போட்டுக் கொள்வதை மக்களிடம் நினைவுபடுத்தும் வித்தியாசமான முயற்சியை அந்நாட்டு விமானி ஒருவர் முன்னெடுத்தார்.
தடுப்பூசியைப் போட உதவும் ‘சிரிஞ்ச்’ சாதனத்தின் வடிவிலான 200 கிலோ மீட்டர் தூர பயணப் பாதையில் அவர் விமானத்தை இயக்கியுள்ளார்.
சேமி கிரேமர் எனும் அந்த 20 வயது விமானி, தெற்கு ஜெர்மனியில் ‘லேக் கான்ஸ்டன்ஸ்’ எனும் பகுதிக்கு அருகே விமானத்தை இயக்குவதற்கு முன்பு, விமானத்தில் தாம் செல்லவிருக்கும் பாதையை ‘ஜிபிஎஸ்’ சாதனத்தில் திட்டமிட்டார். ‘சிரிஞ்ச்’ வடிவிலான அந்தப் பயணப் பாதை ‘ஃபிளைட்ரேடார்24’ எனும் இணையத்தளத்தில் காண்பிக்கப்பட்டது.
“தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் இன்னும் விரும்பாதது எனது கவனத்திற்கு வந்தது. அவர்களது சிந்தனையை மாற்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கவே நான் இந்த நடவடிக்கையில் இறங்கினேன்,” என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் திரு கிரேமர் நேற்று முன்தினம் கூறினார்.
எனினும் தமது பயணம், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான உத்தரவு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை ஜெர்மனி நேற்று முன்தினம் தொடங்கியது. இவ்வாண்டு இறுதிக்குள் 1.3 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளைச் சுகாதார அதிகாரிகளிடம் விநியோகிக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனவரியில் இருந்து விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை வாரத்திற்கு 700,000ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட முதல் நபராக 101 வயது மாது ஒருவர் விளங்குகிறார். வடக்கு ஜெர்மனியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் அவர் வசிக்கிறார்.
முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கும் அங்கு பணிபுரிபவர்களுக்கும் தடுப்பூசி போட ஜெர்மானிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment