கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு
- Get link
- X
- Other Apps
தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தம்மால் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்று தமது டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
வரும் 31ஆம் தேதி கட்சி தொடக்கம் பற்றிய தகவல்களை அறிவிப்பதாக முன்பு ரஜினி தெரிவித்திருந்தார். ஹைதராபாத்தில் அண்மையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், நேற்று சென்னைக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டது.
அதனையடுத்து, தமக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக் குழுவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சுட்டிக் காட்டிய ரஜினி, அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டு, இணையம் வழியாக மட்டும் பிரசாரம் செய்து தாம் நினைப்பதைச் சாதித்துவிட முடியாது என்று குறிப்பிட்டதுடன், தன்னுடைய தற்போதைய உடல்நிலையில் மக்களிடையே சென்று பணியாற்ற இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவை கடவுள் தமக்கு விட்ட எச்சரிக்கையாகவே கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள ரஜினி, தமது அரசியல் பிரவேசம் பற்றிய நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை,” என்று தமது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்,” என்று குறிப்பிட்ட ரஜினி, “இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன்,” என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரஜினி.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment