நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கட்சி தொடங்கப்போவது இல்லை; உடல்நிலை காரணமாக நிலைப்பாட்டில் மாற்றம் - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

 

கட்சி தொடங்கப்போவது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசியலில் கால் நூற்றாண்டாகவே, அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், நடிகர் ரஜினிகாந்த். ஆனால், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி, ரசிகர்களை சந்தித்தபோதுதான், “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் அறிவித்தார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவருடைய ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி ரஜினிகாந்த் பரபரப்பு டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதாவது, ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், அது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதி வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருந்த கட்சியின் பெயரும், மக்கள் சேவை கட்சி என்பது கசிந்தது.

கட்சி அறிவிப்புக்கு முன்பாக, தான் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட ரஜினிகாந்த் எண்ணினார். அதற்காக, ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடைபெற்ற படப்பிடிப்பில் இடைவிடாது கலந்துகொண்டார். ஆனால், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தாலும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், டாக்டர்கள் அவரை வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள்.

உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். தொடர்ந்து, வீட்டிலேயே அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில், 31-ந் தேதி (நாளை) புதிய அறிவிப்பை அவர் வெளியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. என்றாலும், அவரது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் வழிமேல் விழிவைத்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று தடாலடியாக அறிவித்தார்.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், தனது டுவிட்டர் வழியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முககவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்திவந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது.

உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா இல்லை என்று வந்தது. ஆனால் எனக்கு ரத்த கொதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தை கொண்டும் எனக்கு ரத்த கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும்.

ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் 3 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பலபேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெறமுடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து, கூட்டங் களை கூட்டி, பிரசாரத்துக்கு சென்று ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் 3 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று 2-வது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை (‘இம்யூனோ சப்ரசன்ட்’) சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரசாரத்தின்போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர்போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது, எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்னை மன்னியுங்கள். மக்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள். அது வீண்போகாது.

அந்த புண்ணியம் என்றும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30-ந்தேதி நான் உங்களை சந்தித்தபோது நீங்கள் எல்லோரும் ஒருமனதாக உங்கள் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.
3 ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல்நலத்தை கவனியுங்கள், அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய தமிழருவி மணியனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்கூட வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜூனமூர்த்திக்கும் நன்றிகூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ? அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியது இல்லை. உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!