பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் பார்களை இன்று முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. வாடிக்கையாளர் செல்போன் எண், பெயர் விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளுடன், பார்களும் மூடப்பட்டிருந்தன. ஆனால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது மதுக் கடைகள் திறக்கப்பட்டாலும், கடந்த 9 மாதங்களாக பார்கள் திறக்கப்படாமலேயே இருந்து வந்தது.
இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழகத்தின் அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர் களுக்கு, டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் (முழு கூடுதல் பொறுப்பு) அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதியில் இருந்து டாஸ்மாக் சில்லரை மது விற்பனை கடைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களை (பார்கள்) மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில் அரசுக்கு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் உள்ள மதுக்கடைகளுடன் இணைந்துள்ள பார்களை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, 29-ந்தேதி (இன்று) முதல் திறப்பதற்கு அரசு அனுமதித்துள்ளது.
எனவே திறக்கப்படும் பார்களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
பார்களை திறப்பதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது.
அதன் விவரம் வருமாறு:-
* பாரில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு இடையே 6 அடி இடைவெளியை முடிந்தவரை பராமரிக்க வேண்டும்.
* முககவசங்கள் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
* அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
* தும்மல், இருமல் வரும்போது வாயையும், மூக்கையும் ‘டிஷ்யூ’ பேப்பர் அல்லது கைக்குட்டை ஆகியவற்றை வைத்து மூடிக்கொள்ளவேண்டும்.
* உடல்நலக்குறைவு தெரிந்தால் அதுபற்றி மாநில அல்லது மாவட்ட உதவி எண்ணுக்கு தகவல் அளிக்கலாம்.
* பாருக்குள் கண்டிப்பாக துப்பக்கூடாது.
* ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
* பாரில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
* கூடுதலாக கூட்டம் வந்தாலோ, வரிசையில் ஆட்கள் நின்றாலோ சமூக இடைவெளி வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
* பாரில் போடப்பட்டுள்ள இருக்கைகள் வாடிக்கையாளருக்கு இடையே சமூக இடைவெளியுடன் போடப்பட்டிருக்க வேண்டும்.
* பாரின் நுழைவு வாயிலில் கண்டிப்பாக கிருமிநாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்யும் கருவி வைத்திருக்க வேண்டும்.
* காய்ச்சல் இருக்கிறதா? என்று சோதிப்பதற்காக உடலை தொடாத வெப்பமானி பயன்படுத்தப்பட வேண்டும்.
* பொதுவான பகுதிகளிலும், தொட்டு பயன்படுத்தாதபடி கிருமிநாசினி எந்திரங்கள் வைக்கப்பட வேண்டும்.
* பார் ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளரின் தொடர்பு எண் மற்றும் அவரை பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். அதற்கான பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.
* கொரோனா அறிகுறி இல்லாத வாடிக்கையாளர்களை மட்டுமே பாருக்குள் அனுமதிக்க வேண்டும்.
* சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பார்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
* பாரில் உள்ள வயதான பணியாளர்கள், மருத்துவ குறைபாடு உள்ள பணியாளர்கள் முன்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* மருத்துவ ரீதியாக தகுதி உள்ள ஆட்களை மட்டுமே, அதுவும் வேறு உடல்நலக்கோளாறு இல்லாதவர்களை குறிப்பாக 55 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
* பாருக்குள் நுழையவும், வெளியே செல்லவும் தனித்தனி வசதி ஏற்படுத்த வேண்டும்.
* சமூக இடைவெளிக்காக குறிப்பிட்ட இடைவெளியில் அடையாளங்கள் இடப்பட வேண்டும்.
* மத்திய பொதுப்பணித்துறை வழிகாட்டுதலின்படி ஏ.சி. எந்திரங்கள் மூலம் பாரில் சீதோஷ்ண வசதி செய்து கொடுக்க வேண்டும். வெளிக்காற்று 50 சதவீதம் வரும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.
* அடிக்கடி பாரையும், கழிவறையையும், இருக்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
* கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள எந்தவொரு பணியாளரையும் பாரில் பணிக்காக நியமிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment