“கொரோனா தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.7,544 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “புதிய வகை தொற்றுக்கு அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.சென்னை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
நிவர், புரெவி புயல்கள் தாக்கி, டெல்டா உள்பட பல மாவட்டங்களில் கனமழை பொழிந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்போது அரசு உயரதிகாரிகள், கலெக்டர்கள் மற்றும் பல அரசுத் துறைகள் ஒன்றாக இணைந்து துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட காரணத்தால் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் நேரில் ஆய்வு செய்தபோது, விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டை ஆய்வு செய்யும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகளின் வங்கிக் கணக்கு பெறப்பட்டு, 4 நாட்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு அரசுக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும்.
கொரோனா தடுப்பு பணியில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் படிப்படியாக தொற்று குறையத் தொடங்கியுள்ளது. தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டிற்கு பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள 13 பேருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவில்தான் உருமாறிய வைரஸ் தொற்று உள்ளதா? எனக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும்.
இந்நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி முகக்கவசம் அணிவதுதான். இந்நோய்த் தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்கின்றனர். முகக்கவசம் அணியாத காரணத்தால்தான் தொற்று ஏற்படுகிறது அரசு அறிவிக்கிற வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று மிக மிகக் குறைந்திருக்கிறது. பல இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்புகிறது.
கொரோனா தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.7,544 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஏழை மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2 ஆயிரம் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன. மினி கிளினிக்கில் தினமும் 75 முதல் 120 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
புத்தாண்டு, தைப்பொங்கல் பண்டிகைகள் வருவதால், தொடர் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் விழிப்புடன் கண்காணித்து செயல்பட வேண்டும்.
பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியத் தவறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இதுபற்றி காவல் துறையும், உள்ளாட்சித் துறையும், மாவட்ட நிர்வாகமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நோய்த் தொற்று 5.84 சதவீதமாக உள்ளது. சிகிச்சையில் 8,947 பேர் உள்ளனர். இறப்பு 1.48 சதவீதமாக உள்ளது.
பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுக்கிறது. 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கிராமப்புறங்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்து, வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை பெருக்க, சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவ நிபுணர்கள் குழு
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) விஞ்ஞானியும், சென்னை தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநருமான டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பு (தமிழ்நாடு) முதுநிலை மண்டல குழுத்தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், ஈரோட்டிலிருந்து இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் (தமிழ்நாடு) டாக்டர் பி.ராமகிருஷ்ணன், வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜெ.வி.பீட்டர் மற்றும் அரசு மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.
மேலும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தளர்வுகளை அமல்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இது மேலும் குறையுமா? அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்பது பற்றி மருத்துவ நிபுணர்களுடன் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பூசிகளை போடுவதற்கு தமிழக அரசு என்னென்ன முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும்? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
மருத்துவ நிபுணர்கள் குழுவிடம் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உருமாற்றம் அடைந்த கொரோனா பற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் கொடுத்த வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக என்னென்ன தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்பதை இரண்டொரு நாளில் முதல்-அமைச்சர் முறையாக அறிவிப்பார்.
Comments
Post a Comment