TitTok Music App | ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக் போன்ற முன்னணி மியூசிக் செயலிகளுக்கு போட்டியாக டிக்டாக் ஒரு மியூசிக் ஆப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணைய தளத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய செயலிகளில் டிக்டாக்கும் ஒன்று. டிக்டாக் இல்லாத நாடே கிடையாது என்ற அளவுக்கு கோடிக்கணக்கான யூசர்களை தன்வசப்படுத்தியது ஆனால் இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டிக்டாக் தடை வேறு சில ஷார்ட் வீடியோ தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உதாரணமாக கிட்டத்தட்ட டிக்டாக்கின் அனைத்து யூசர்களும் இன்ஸ்டாகிராமுக்கு மாறிவிட்டார்கள். இன்ஸ்டாகிராமும் தற்போது டிக்டாக் போன்ற ஷார்ட் வீடியோ செயலியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புதிய விருப்பங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக் போன்ற முன்னணி மியூசிக் செயலிகளுக்கு போட்டியாக டிக்டாக் ஒரு மியூசிக் ஆப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிக்டாக்கின் தாய் நிறுவனமான ByteDance ஏற்கனவே ரெஸ்ஸோ என்ற ஒரு மியூசிக் செயலியைக் கொண்டுள்ளது, இது இந்தியாவிலும் உள்ளது. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்கா வர்த்தகமுத்திரை பதிவு அலுவலகத்தில் மே மாதம் ‘டிக்டாக் மியூசிக்’ என்ற பெயரில் ஒரு வர்த்தகமுத்திரைப் பதிவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வர்த்தக முத்திரை விண்ணப்பத்தை பதிவு செய்ததன் அடிப்படையில், டிக்டாக் மியூசிக் யூசர்கள் பல்வேறு சேவைகளைப் பெறலாம். யூசர்கள் இசை மற்றும் பாடல்களை கேட்கலாம், பகிரலாம் மற்றும் டவுன்லோடு செய்யலாம், அதுமட்டுமல்லாமல் கட்டணம் செலுத்தி வாங்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன.
அதுமட்டுமில்லாமல் தளத்தில் இருக்கும் இசைக்கோப்பில் யூசர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம், பிளேலிஸ்ட்களை உருவாக்கி, பகிர்ந்து மற்றும் மற்றவர்களுக்கு பரிந்துரையும் செய்யலாம். கூடுதலாக ஆடியோ மற்றும் வீடியோக்களை லைவ்ஸ்ட்ரீம் செய்யும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது என்று வர்த்தக முத்திரை விண்ணப்பத்துக்கான அறிக்கையில் நிறுவனம் குறிப்பிட்டு இருந்ததாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இந்த செயலியில் மேலே குறிப்பிட்டுள்ள வர்த்தக முத்திரைக்கான விண்ணப்பத்தில் விரிக்கப்பட்டிருக்கும் பல்வேறு சேவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் ரெஸ்ஸோவைப் பயன்படுத்தும் நேரடி ஆப்ஷனும் உள்ளது. அதாவது, டிக்டாக்கில் ஒரு ஷார்ட் வீடியோவை நீங்கள் லைக் செய்திருந்தால், அந்த வீடியோ இடம்பெற்றிருக்கும் முழு பாடலையும் ரெஸ்ஸோவிற்கு நேரடியாக சென்று கேட்டு மகிழும் விருப்பம் பிரேசில் டிக்டாக் யூசர்களுக்கு உள்ளது.
இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் மொத்தமாக ரெஸ்ஸோ செயலியில் 4 கோடி மாதாந்திர யூசர்கள் உள்ளனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு செயலிக்கு இது மிகப்பெரிய ஆரம்பம் என்றும் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து ரெஸ்ஸோ இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. ஜனவரி 2021 முதல் ஜனவரி 2022 என்ற ஓராண்டு காலகத்தில், ரெஸ்ஸோ 304% வளர்ச்சியை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அசுர வளர்ச்சி ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக் மற்றும் ஆப்பிள் யூஸர்களுக்கான பிரத்தியேகமான ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு மியூசிக் செயலிகளுக்கு மிகப்பெரிய போட்டியாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
Comments
Post a Comment