ரோஜாப்பூ இதழுடன் சீனக் கற்கண்டு கலந்து பிசைந்து, அவற்றுடன் சிறிது தேன் கலந்து தொடர்ந்து ஆறு நாட்கள் வெயிலில் வைத்தால் அது குல்கந்தாக மாறும். இதை காலை, மாலை என இரு வேளையும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
சிறியவர் முதல் பெரியவர் வரை உடலில் இருக்கும் பெரும் சிக்கல் ‘மலச்சிக்கல்’ பிரச்சினைதான். இதற்காக பானங்கள், தேநீர், மருந்து என பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டாலும், அது நிரந்தர தீர்வை அளிப்பதில்லை. உணவு, உடல்அமைப்பு, வாழ்வியல் மாற்றம் என பல காரணங்களால் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும் சில பாட்டி வைத்திய குறிப்புகள் இதோ:
தூதுவளைக் காயை உலர்த்தி தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி, எண்ணெய்யில் வறுத்து சாப்பிடலாம்.
பால் பெருக்கி இலையை வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
கருங்காக்கரட்டான் வேரை பால் ஆவியில் வேக வைத்து உலர்த்தவும். அதில் பாதி அளவு சுக்கு சேர்த்து அரைக்கவும். காலை, மாலை இரண்டு வேளையும் அரை டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வரலாம். இதன்மூலம் மலச்சிக்கல் சரியாகும்.
நில ஆவாரை இலையைத் துவையலாக அரைத்து, இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை படிப்படியாகக் குறையும்.
கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொறித்த பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு இடித்து, சூரணம் செய்து, சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்.
சிறிதளவு நுணா வேரை குடிநீரில் ஊற வைத்து குடிக்கலாம்.
ஒரு பிடி மூக்கிரட்டை வேர் மற்றும் 4 மிளகை, 100 மில்லி விளக்கெண்ணெய்யில் வாசனை வரும் அளவு காய்ச்சவும். ஆறியதும் வடிகட்டி வைத்துவாரம் ஒரு முறை சாப்பிடலாம்.
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு கிலோ விளக்கெண்ணெய், ஒரு கிலோ நன்றாக கழுவிய சோற்றுக்கற்றாழை சதைப்பகுதி, அரைக் கிலோ பனங்கற்கண்டு, அரைக் கிலோ வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து காய்ச்சவும். இந்த எண்ணெய்யை காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி உடல் தேறும். மேலும், இம்முறையை பின்பற்றும்போது புளி நீக்கிய பத்திய உணவு சாப்பிட வேண்டும்.
வாதநாராயணன் இலைச்சாறு, விளக்கெண்ணெய், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, வெண்கடுகு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ‘வாதமடிக்கித் தைலத்தை’ தினமும் காலை வேளையில் ஒரு தேக்கரண்டி சாப்பிடலாம்.
30 மில்லி விளக்கெண்ணெய்யில், மூன்று துளி எருக்கு இலைச்சாறைக் கலந்து குடிக்கலாம்.
ரோஜாப்பூ இதழுடன் சீனக் கற்கண்டு கலந்து பிசைந்து, அவற்றுடன் சிறிது தேன் கலந்து தொடர்ந்து ஆறு நாட்கள் வெயிலில் வைத்தால் அது குல்கந்தாக மாறும். இதை காலை, மாலை என இரு வேளையும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
வில்வ இலைச் சூரணம் அரைத் தேக்கரண்டி, வெண்ணெய் அல்லது நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிடலாம்.
முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து, ரசமாக்கி உணவோடு சேர்ந்து வாரம் ஒரு முறை என்ற கணக்கில் சாப்பிடலாம் அல்லது மிளகாய்ப்பூண்டு இலையை கீரை போல் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் மட்டுப்படும்.
Comments
Post a Comment