இதயத்தில் 99.9 சதவீத அடைப்புடன் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞரின் உயிரை
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றிய சம்பவம் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பலரது உயிரைக் காக்கும் ஆபத்பாந்தவனாக வேலை செய்து வருகிறது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை சற்றே அதிகம் என்றாலும், அதனால் கிடைக்கும் பலன்களை ஒப்பிட்டு பார்த்தால் மலைக்க வைக்கிறது. ஆப்பிள் வாட்ச் உயிர் காக்கும் கருவியாக மாறியதை பற்றிய பல கதைகளை நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டிருக்கிறோம், தற்போது அது ஹரியானாவைச் சேர்ந்த 34 வயது இளைஞரின் வாழ்விலும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.
34 வயதான பல் மருத்துவர் நித்தேஷ் சோப்ரா, ஹரியானாவில் உள்ள யமுனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். ஒருநாள் நித்தேஷ் சோப்ரா வீட்டில் இருக்கும் போது திடீரென அவர் நெஞ்சுவலியையும், மயக்கம் வருவது போன்ற உணர்வையும் அனுபவித்துள்ளார். இதுகுறித்து நித்தேஷ் கூறியது தான் தாமதம், அவரது மனைவி நேஹா தனது கணவர் தனக்காக ஆசை ஆசையாக வாங்கி பரிசளித்த ஆப்பிள் எஸ் 6 வாட்சை எடுத்து வந்து அவரது கையில் அணிவித்தார். அதில் உள்ள ECG சேவையை பயன்படுத்தியவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் நித்தேஷ் சோப்ராவின் இதயத்துடிப்பு சரியில்லை என்பது உறுதியானதை அடுத்து, அருகேயுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்துள்ளனர். மருத்துவமனையில் ஆஞ்சியோகிராபி செய்த பிறகு, நேஹா மற்றும் நித்தேஷுக்கு கவலை அளிக்க கூடிய செய்தி காத்திருந்தது.
ஆம், நித்தேஷ் இதய தமனிகளில் 99.9 சதவீதம் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி நேஹா கூறுகையில், "நித்தேஷுக்கு இதயத்தில் ஒரு ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும், மோசமாக எதுவும் நடக்கும் முன்பே நித்தேஷை காப்பாற்றிவிட்டோம். நீங்கள் அதிர்ஷடசாலிகள் என மருத்துவர்கள் வாழ்த்தியதையும்” நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போது நித்தேஷ் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆப்பிள் வாட்ச் கொடுத்த தீவிர எச்சரிக்கையால் தனது கணவர் உயிர் காக்கப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்த நேஹா, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்கிற்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான டிம் குக்கிற்கு நேஹா அனுப்பிய இமெயிலில், “ஆப்பிள் வாட்சில் நீங்கள் வழங்கியுள்ள தொழில்நுட்பத்தால் மட்டுமே நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம். அவர் இப்போது நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். நான் உங்களுக்கு எனது அன்பையும், மகிழ்ச்சியையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் என் கணவரின் உயிரைக் காப்பறியதற்கு நன்றி" எனக்குறிப்பிட்டுள்ளார்.
நேஹாவிற்கு பதில் மெயில் அனுப்பியுள்ள ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் “நீங்கள் மருத்துவ உதவியை நாடியதற்கும் உங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெற்றதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்படியொரு செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment